ஐ.சி.சி. ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ஜியோஸ்டார்..? உண்மை நிலவரம் என்ன..?
இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜியோ ஸ்டார் வாங்கியுள்ளது.;
துபாய்,
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ ஸ்டார் 17 மொழிகளில் திரைப்படங்கள், நாடகங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கி வருகிறது. இதில் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிரபலமாக கவனிக்கப்படுகிறது. 2024 முதல் 2027 வரை ஐ.சி.சி. நிகழ்வுகளுக்கான இந்திய நேரடி ஒளிபரப்பு உரிமைகளை ஜியோ ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது.
இதில் டி20 உலகக்கோப்பை 2024 நடைபெற்று முடிந்துவிட்டது. முன்னதாக சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி 2025, மகளிர் உலகக்கோப்பை 2025, டி20 உலகக்கோப்பை 2026 போன்ற முக்கியமான சில போட்டிகள் இதில் அடங்கும்.
இதனிடையே நிதி இழப்பு காரணமாக ஜியோ ஸ்டார் 2026 டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக விரும்புவதாக ஐசிசி-க்கு தகவல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. இதனால் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணமுடியாதோ என ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த தகவல்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ.சி.சி. மற்றும் ஜியோஸ்டார் இடையேயான தற்போதைய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. ஜியோஸ்டார் இந்தியாவில் ஐ.சி.சி.-ன் அதிகாரபூர்வ ஊடக உரிமை கூட்டாளியாக தொடர்கிறது. ஜியோஸ்டார் ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக கூறப்படும் எந்தவொரு கருத்தும் தவறானது” என விளக்கமளித்துள்ளது.