கம்பீர் - ஹர்திக் பாண்ட்யா இடையே வாக்குவாதம்..? வீடியோ வெளியாகி பரபரப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.;
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 90 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 214 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் திலக் வர்மா 62 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பார்த்மேன் 4 விக்கெட் கைப்பற்றினார். டி காக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் முன்னணி ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 215 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய இக்கட்டான சூழலில் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய அவர் 28 பந்துகளில் 59 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த 2-வது போட்டி முடிந்ததும் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு செல்லும் வழியில் ஹர்திக் பாண்ட்யா - தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது போல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தோல்விக்கு பாண்ட்யாதான் காரணம் என கம்பீர் அவரிடம் கோபம் கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டி முடிந்த பிறகு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கவுதம் கம்பீர் ஆவேசமாக ஹர்திக் பாண்டியாவிடம் பேசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஏற்கனவே முன்னணி வீரர்களுக்கும் கவுதம் கம்பீருக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.