ஒருநாள் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்த ஜடேஜா
ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை.;
ஜெய்ப்பூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா, மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்த ஜடேஜா, சில மாதங்களுக்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் அணி தேர்வில் ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:
”ஒருநாள் போட்டிகளில் நான் விளையாட விரும்புகிறேன். ஆனால் அது என் கையில் இல்லை. அணி கட்டமைப்பு குறித்து அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கிறார்கள். ஆனால், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது, இத்தனை வருடங்களாக நான் செய்ததை மீண்டும் செய்ய முயற்சிப்பேன். உலகக் கோப்பையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அங்கு நான் சிறப்பாகச் செயல்பட்டால், அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. உலகக் கோப்பையை வெல்வது என்பது அனைவரின் கனவு. கடந்த முறை நாங்கள் அதை அருகில் வந்து தவறவிட்டோம். அடுத்த முறை உலகக்கோப்பையை வெல்வதற்கு முயற்சிப்போம்.”
இவ்வாறு அவர் பேசினார்.