லார்ட்ஸ் டெஸ்ட்: ராகுல், பண்ட் இல்லை.. அவர் டக் அவுட் ஆனதே இந்தியாவின் தோல்விக்கு காரணம் - ஸ்டூவர்ட் பிராட்

லார்ட்சில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.;

Update:2025-07-18 13:15 IST

image courtesy:BCCI

லண்டன்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு 2-வது இன்னிங்சின் முக்கியமான தருணத்தில் கே.எல்.ராகுல் மற்றும் பண்ட் ஆட்டமிழந்தது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இருவரும் ஆட்டமிழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. பின்வரிசை பேட்ஸ்மேன்களின் ஒத்துழைப்புடன் ஜடேஜா தனி ஆளாக போராடியும் பலனில்லை.

இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ஆன ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனதே தோல்விக்கு காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது உண்மையிலேயே ஒரு மோசமான ஷாட்தான். ஸ்டம்புக்கு வெளியில் வந்த பந்தை கட் அடிக்க நினைத்து அவர் ஆட்டமிழந்து விட்டார். அதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். அவர் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணிக்கு ஒரு புத்துணர்ச்சி வந்துவிட்டது. ஏனெனில் அவர் போன்ற ஒரு அதிரடியான தொடக்க வீரர் அணியின் ரன் குவிப்பை வேகப்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவர்.

இதுபோன்ற குறைந்த இலக்கினை சேசிங் செய்யும்போது எதிரணியில் சேவாக், வார்னர் போன்ற அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் இருந்தால் வெற்றியை உங்களிடம் இருந்து விடுவார்கள். அந்த வகையில் ஜெய்ஸ்வாலும் அதிரடியான தொடக்கத்தை அளிக்கக்கூடிய ஒரு அற்புதமான வீரர். ஆனால் அவர் டக் அவுட்டானதாலேயே இந்திய அணி அழுத்தத்திற்குள் மாட்டியது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்