முழு வீச்சில் தயாரான கில்...கடைசி நேரத்தில் வந்த அதிர்ச்சி
துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெறவில்லை;
சென்னை,
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடருகிறார். ஆனால் அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. துணை கேப்டன் பொறுப்பு அக்சர் படேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான சுப்மன் கில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதால் கில் பெரும் ஏமாற்றத்தில் உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால், அதே நிலை தொடரும் என நினைத்து கில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முழு வீச்சில் தயராகி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அவருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும் கடைசி சில மணி நேரத்துக்கும் முன்பாக தான் கில்லுக்கு தகவல் கூறப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.