ரஞ்சி கிரிக்கெட்: ஜார்கண்டுக்கு எதிராக தமிழக அணி இன்னிங்ஸ் தோல்வி
தமிழக அணி முதல் இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது.;
image courtesy:twitter/@TNCACricket
கோவை,
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- ஜார்கண்ட் அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் ஜார்கண்ட் 419 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. பின்னர் 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த சூழலில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி 79 ஓவர்களில் 212 ரன்னில் அடங்கியது. இதனால் ஜார்கண்ட் அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 80 ரன்கள் அடித்தார். ஜார்கண்ட் தரப்பில் ரிஷாவ் ராஜ் 4 விக்கெட்டும், அனுகுல் ராய் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.