சர்வதேச கிரிக்கெட்: இன்னும் 1 விக்கெட்.. வரலாற்று சாதனை படைக்க உள்ள பும்ரா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.;
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் (முதல் போட்டி மழையால் ரத்து) தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டுவார். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.
இவர் ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் (226 விக்கெட்டுகள்) மற்றும் ஒருநாள் (149 விக்கெட்டுகள்) கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியுள்ளார்.