ரிங்கு சிங் போராட்டம் வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ வெற்றி
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகானே 61 ரன்கள் அடித்தார்.;
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 87 ரன்களும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களும் அடித்தனர். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன டி காக் 15 ரன்களில் ஆட்டமிழந்து எமாற்றம் அளித்தார்.
பின்னர் கை கோர்த்த சுனில் நரைன் - கேப்டன் நரைன் கூட்டனி அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணிக்கு வலு சேர்த்தது. இதில் சுனில் நரைன் 13 பந்துகளில் 30 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயரும் பேட்டை வேகமாக சுழற்ற கொல்கத்தா அணி இலக்கை நோக்கி வேகமாக பயணித்தது. மறுபுறம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரகானே 61 ரன்களில் (35 பந்துகள்) ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரமந்தீப் சிங் (1 ரன்), ரகுவன்ஷி (5 ரன்கள்), ரசல் (7 ரன்களில்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அடுத்து வந்த ரிங்கு சிங் தனி ஆளாக போராட வெங்கடேஷ் ஐயர் (45 ரன்கள்) முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிங்கு சிங்கின் போராட்டம் இலக்கை நெருங்க உதவியதே தவிர கடக்க உதவவில்லை.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் 3 பந்துகளை எதிர்கொண்ட ஹர்ஷித் ராணா 5 ரன்கள் அடித்தார். அடுத்த 3 பந்துகளை எதிர்கொண்ட ரிங்கு சிங் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 14 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி வரை போராடிய ரிங்கு சிங்கின் போராட்டம் வீணானது.
20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய கொல்கத்தா அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிங்கு சிங் 38 ரன்களுடன் (15 பந்துகள்) களத்தில் இருந்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் மற்றும் ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.