ரோகித், தோனி இல்லை.. அந்த 2 இந்திய வீரர்கள்தான் என்னுடைய ரோல்மாடல் - சுப்மன் கில்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் உள்ளார்.;
image courtesy:PTI
மும்பை,
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் வீரராக சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ள அவர் விரைவில் இந்திய அணியின் ஆல் பார்மட் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார்.
தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அத்துடன் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் ஜொலித்த அவர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் தம்முடைய ரோல் மாடல்கள் என்று சுப்மன் கில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலிதான் எனக்கு ரோல்மாடல். அவர்களை பார்த்துத்தான் கிரிக்கெட்டையும், தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டேன். என்னுடைய தந்தைக்கு பிடித்த சச்சின் தெண்டுல்கரை பார்த்தே நான் கிரிக்கெட்டுக்குள் வந்தேன். நான் உண்மையில் கிரிக்கெட்டில் ஈடுபட்டது அவரால்தான். இருப்பினும் அவர் 2013-இல் ஓய்வு பெற்றார்,
2011-2013 காலத்தில் நான் உண்மையில் கிரிக்கெட்டை சரியாக புரிந்துகொள்ளத் தொடங்கினேன். குறிப்பாக திறமை மட்டுமின்றி மனதளவிலும் தந்திரபாயங்கள் அடிப்படையிலும் கிரிக்கெட்டை புரிந்துகொள்ளத் தொடங்கினேன். அதே காலத்தில் நான் விராட் கோலியை நெருக்கமாக கவனிக்க தொடங்கினேன். வெற்றி பெற வேண்டும் என்ற கோலியின் வேட்கை எனக்கு மிகுந்த உத்வேகம் அளித்தது” என்று கூறினார்.