தென் ஆப்பிரிக்கா, ஆஸி. இல்லை.. உலகிலேயே சிறந்த அணி அவர்கள்தான் - ஆப்கானிஸ்தான் வீரர் புகழாரம்

ஆசிய கோப்பையில் சூப்பர்4 சுற்று வாய்ப்பை இழந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியது.;

Update:2025-09-19 09:41 IST

image courtesy:ICC

அபுதாபி,

8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு நடந்த ‘பி’ பிரிவின் கடைசி லீக்கில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுகட்டின. சூப்பர்4 சுற்றுக்கு முன்னேற கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் ‘பி’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டின. ஆப்கானிஸ்தான் (2 புள்ளி) வெளியேறியது.

இதனிடையே இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் குல்பாடின் நைப் ஆசியாவிலும் உலகிலும் சிறந்த அணி இந்தியாதான் என்று புகழாரம் சூட்டினார்.

இது குறித்து பேசிய அவர்,இந்தியா ஆசியாவிலும் உலகிலும் சிறந்த அணி. இந்திய வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். நான் ஐ.பி.எல்.-லிலும் சரி, அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சரி இந்திய வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துள்ளேன். எனக்கு சிறந்த அனுபவம் கிடைத்தது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த அணிதான் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. நன்றாக விளையாடும் அணி வெற்றி பெறும். இருப்பினும், பேப்பரில் பார்த்தால், இந்தியாவே சிறந்த அணி” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்