தென் ஆப்பிரிக்க அணி புயலில் அமைதி கண்டது - சச்சின் வாழ்த்து

3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி கோப்பையை கைப்பற்றியது.;

Update:2025-06-15 17:30 IST

மும்பை,

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன.

பின்னர் 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 282 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 136 ரன்களும், கேப்டன் பவுமா 66 ரன்களும் அடித்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐ.சி.சி. கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. இதனால் அந்த அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், "டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து அதன் மாயாஜாலத்தை நெசவு செய்து வருகிறது.

ஒவ்வொரு செசனும் அதன் சொந்த கதையைக் கொண்டிருந்த இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி புயலில் அமைதியைக் கண்டது. நான்காவது இன்னிங்ஸில் மார்க்ராமின் அமைதியும், அழுத்தத்தின் கீழ் பவுமாவின் மன உறுதியும் உயர்ந்து நின்றன. மார்க்ரமின் சதம் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். நம்பிக்கையை வரலாறாக மாற்றிய ஒரு கூட்டணி.

உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்காவுக்கு வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்