டி20 கிரிக்கெட்; மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த ஜாஸ் பட்லர்
டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையைப் பட்லர் பெற்றார்.;
Image Courtesy: @englandcricket
லண்டன்,
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்று நடைபெற்ற நார்த் குரூப் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் யார்க்ஷயர் மற்றும் லங்காஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லங்காஷயர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் அடித்தார். யார்க்ஷயர் தரப்பில் தாம்சன், சோஹான், மில்னஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யார்க்ஷயர் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லங்காஷயர் தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிறிஸ் கிரீன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் லங்காஷயர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் யார்க்ஷயர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் பட்லர் 77 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 13 ஆயிரம் ரன்களையும் பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் இங்கிலாந்து அணி தரப்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் (13,814) மட்டுமே டி20 கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.
இதுதவிர்த்து உலகளவில் டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களைக் கடந்த 7-வது வீரர் எனும் பெருமையையும் பட்லர் பெற்றுள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில், பொல்லார்டு, அலெக்ஸ் ஹேல்ஸ், சோயப் மாலிக், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
கிறிஸ் கெயில் - 14,562 ரன்
கைரன் பொல்லார்டு - 13,854 ரன்
அலெக்ஸ் ஹேல்ஸ் - 13,814 ரன்
சோயப் மாலிக் - 13,571 ரன்
விராட் கோலி - 13,543 ரன்
டேவிட் வார்னர் - 13,395 ரன்
ஜாஸ் பட்லர் - 13,046 ரன் *