டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த டிம் டேவிட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டிம் டேவிட் சதம் அடித்தார்.;
கயானா,
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப்பின் அபார சதத்தின் (102 ரன்கள்) உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஆல்ரவுண்டர் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 37 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார்.
முடிவில் ஆஸ்திரேலியா வெறும் 16.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.