சர்வதேச டி20 கிரிக்கெட்; பிராவோவின் சாதனையை முறியடித்த ஹோல்டர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.;
image courtesy:twitter/@windiescricket
புளோரிடா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 40 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. ஹோல்டர் 16 ரன்களுடனும், ஷமர் ஜோசப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆல் ரவுண்டராக ஜொலித்த ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பிராவோவின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பிராவோவை (78 விக்கெட்), பின்னுக்கு தள்ளி ஹோல்டர் (81 விக்கெட்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:
ஜேசன் ஹோல்டர் - 81* விக்கெட்
டுவைன் பிராவோ - 78 விக்கெட்
அஹேல் ஹொசைன் - 72 விக்கெட்
ரொமாரியோ ஷெப்பர்டு - 64 விக்கெட்