ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: அபிஷேக் இல்லை.. அவர்தான் வெற்றிக்கு முக்கிய காரணம் - இர்பான் பதான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.;

Update:2025-11-10 10:51 IST

மும்பை,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கான்பெர்ராவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், கோல்டுகோஸ்டில் நடந்த 4-வது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் கடைசி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.

டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற ஷிவம் துபேதான் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரரான இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில், “இந்த டி20 தொடரில் சில மாற்றங்களை இந்திய அணி சரியாக செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர்களின் மீது கவனம் செலுத்தி தொடர்ச்சியாக ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் போன்றவர்களை பயன்படுத்தி வருவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலனையும் கொடுத்துள்ளது.

குறிப்பாக ஷிவம் துபே இந்த தொடரில் பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை காண்பித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா காயமடைந்துள்ள வேளையில் ஷிவம் துபே இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனை நாம் ஆசிய கோப்பையில் பார்த்தோம். என்னை பொறுத்தவரை இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு ஷிவம் துபே முக்கிய காரணம்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்