கேப்டன் சுப்மன் கில்லுக்கு நெருக்கடி அதிகரிக்கும் - கங்குலி
முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன;
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில் , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், 'இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் செய்த விதம் சிறப்பானதாகும். அதனை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறையிலும் சிறந்த வீரர்கள் உருவாகி கொண்டே இருப்பார்கள். அணியில் வெற்றிடம் ஏற்படும் போதெல்லாம் அதனை அடுத்த நிலை வீரர்கள் நிரப்புவார்கள். இந்திய கிரிக்கெட்டில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே ஒவ்வொரு தலைமுறையிலும் நீங்கள் திறமையான வீரர்களை கண்டுபிடிக்க முடியும்.
புதிய கேப்டன் சுப்மன் கில் அற்புதமாக செயல்படுகிறார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை புதிய பாதையை நோக்கி செல்லும் என்று நம்புகிறேன். அவர் தற்போது தான் கேப்டனாகி இருக்கிறார். இனிவரும் நாட்களில் அவர் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும். அடுத்த 3 டெஸ்டுகளில் நெருக்கடி அதிகரிக்கும் என்றார்.