இனி டி20 போட்டிகளில் இதுதான் எங்களது ஸ்டைல் - இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.;

Update:2025-02-03 10:30 IST

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் ஷர்மா, அதிரடியில் வெளுத்து கட்டினார். ஆர்ச்சர், ஓவர்டான் ஓவர்களில் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார்.

பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. பில் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 10.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 97 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "களத்தில் நிற்கும்போது என்ன தோன்றுகிறதோ அதை நாங்கள் செய்து வருகிறோம். அதேபோன்று இந்திய அணியில் யாருக்கெல்லாம் பந்துவீச தெரிகிறதோ அவர்களை எல்லாம் நம்பி பந்தை தருகிறோம். அவர்களும் எங்களது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.

டி20 போட்டிகளை பொருத்தவரை இனி பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவார்கள். அதையே நாங்கள் விரும்புகிறோம். இனிவரும் டி20 தொடர்களிலும் இதுதான் எங்களது ஸ்டைலாக இருக்கும். எப்போதுமே டி20 போட்டிகளில் ரிஸ்க் அதிகம். ரிஸ்க் எடுக்கும்போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும்.

இந்த தொடர் முழுவதுமே வருண் சக்கரவர்த்தி மிகவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். பந்துவீச்சு மட்டுமின்றி அவர் பீல்டிங்கிலும் கடுமையாக உழைத்து வருகிறார். அதற்கு ஏற்ற பலனை அவர் தற்போது பெற்று வருகிறார்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்