நான் பார்த்த சிறந்த டி20 பேட்டிங் இதுதான் - அபிஷேக் சர்மாவுக்கு பட்லர் பாராட்டு
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து இழந்தது.;
மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் ஷர்மா, அதிரடியில் வெளுத்து கட்டினார். ஆர்ச்சர், ஓவர்டான் ஓவர்களில் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார்.
பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. பில் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 10.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 97 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "உண்மையிலேயே இந்த தொடரில் தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் ஒரு சில விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன். மேலும் முன்னேற்ற வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசித்து அதனை மாற்றிக் கொள்வோம். இந்தியா உண்மையிலேயே ஒரு அற்புதமான அணி. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் அவர்கள் விளையாடுவதால் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்களான பிரைடன் கார்ஸ், மார்க் வுட் ஆகியோர் மிகச்சிறப்பாக பந்து வீசினர்.
அதேபோன்று அபிஷேக் சர்மா விளையாடிய விதம் உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இதுவரை எவ்வளவோ கிரிக்கெட்டை பார்த்திருக்கிறேன் ஆனால் இது போன்ற ஒரு அற்புதமான பேட்டிங்கை டி20 கிரிக்கெட்டில் இன்றுதான் பார்த்தேன். இந்த டி20 போட்டிக்கு பிறகு அடுத்ததாக நாங்கள் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறோம். அந்த அணியில் ரூட் எங்களது அணியின் முக்கிய வீரராக அணிக்கு திரும்ப இருப்பது மகிழ்ச்சி. டி20 தொடரில் விட்டதை ஒருநாள் போட்டியில் கைப்பற்ற முயற்சிப்போம்" என்று கூறினார்.