டிஎன்பிஎல்: சேப்பாக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல்

திண்டுக்கல் அணி 18.4 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.;

Update:2025-07-04 23:10 IST

  திண்டுக்கல்,

9-வது டி.என்.பி.எல். தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிகரன் களமிறங்கினர். இதில் மொஹித் 4 ரன்களிலும், ஆஷிக் 8 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர். இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த கேப்டன் பாபா அபராஜித் - ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

திண்டுக்கல் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இருவரும் அரைசதத்தை கடந்தனர். இவர்களின் அதிரடியால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வலுவான நிலையை எட்டியது. இதில் பாபா அபராஜித் 67 ரன்களிலும் (44 பந்துகள்), ஜெகதீசன் 81 ரன்களிலும் (41 பந்துகள்) ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் அடித்தது. திண்டுக்கல் தரப்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அஸ்வின் 21 ரன்களும், சிவம் சிங் 27 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர். பாபா இந்தியஜித் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய விமல் குமார் 30 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் திண்டுக்கல் அணி 18.4 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்