4வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி
இலங்கை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.;
Image Courtacy: ICCTwitter
திருவனந்தபுரம்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைளாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர்.தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் கடந்தனர். ஸ்மிருதி மந்தனா 80 ரன்களும், ஷபாலி வர்மா 79 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் 40 ரன்களும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 16 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் சார்பில் ஹாசினி பெரேரா மற்றும் கேப்டன் அத்தபத்து ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹாசினி பெரேரா 33 ரன்களில் வெளியேற, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அத்தபத்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அருந்ததி ரெட்டி மற்றும் வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.