உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம் - ஜெமிமா ரோட்ரிக்ஸ்
8 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.;
Image Courtesy : ANI
புதுடெல்லி,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்களது ஆலோசனையின்போதும் ஆட்டத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கிறோம். ஏனெனில், இந்த உலகக் கோப்பை குறித்து வெளியில் எத்தனை விஷயங்கள் சென்று கொண்டிருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும்.
வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல், எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இந்திய அணியில் உள்ள ஒவ்வொருவரும் சக வீராங்கனைகளின் வெற்றியை தங்களின் வெற்றியாகக் கருதி கொண்டாடுகிறோம். எங்களது இயல்பான இந்த குணம் அணியை வலுவாக வைத்துள்ளது.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்து பேச வேண்டுமென்றால், அணியில் நான் நுழைந்தபோது மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி போன்றோர் எனக்கு மூத்த வீராங்கனைகளாக இருந்தனர். தற்போது, ஹர்மன்பிரீத் மற்றும் ஸ்மிருதி போன்ற மூத்த வீராங்கனைகள் அணியில் உள்ளனர். இவர்கள் இருவரும் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார்கள். இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளரக் காரணமாக இருந்தவர்களுக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.