அஸ்வின் மீண்டும் அணியில் இடம்பெறுவாரா..? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்

லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டார்.;

Update:2025-04-20 16:06 IST

image courtesy:PTI

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு சீசனில் சென்னை அணி தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது.

அந்த ஆட்டத்தில் சென்னை அணியில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு பேட்ஸ்மேன் ஷேக் ரஷீத் சேர்க்கப்பட்டார். அந்த வாய்ப்பில் ஷேக் ரசீத் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதனால் வரும் போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், "அஸ்வின் போன்ற தரமான ஒரு வீரரை நீக்குவது ஒருபோதும் எளிதானது அல்ல. நாங்கள் அவருக்கான இம்பேக்ட் வீரர் பங்கை ஆராய்ந்து கொண்டிருந்தோம். ஆனால் டாஸ் எங்கள் வழியில் செல்லவில்லை. ஜடேஜா மற்றும் நூர் அகமது போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கும்போது, 3-வது சுழற்பந்து வீச்சாளர் ஆடம்பரமாக தெரிகிறது.

அஸ்வின் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் தரமான வீரர். ஆனால் சில நேரங்களில் உங்களுடைய அணியின் பலத்தை அதிகரிக்கவும் பலவீனத்தை மறைக்கவும் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். அந்த வகையில் நாங்கள் எங்களுடைய அணியை வெற்றிப் பாதையில் கட்டமைப்பதற்குத் தேவையான சரியான சேர்க்கையை உருவாக்க பார்க்கிறோம்" என்று கூறினார்.

இதன் மூலம் இனிவரும் போட்டிகளிலும் அஸ்வின் சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது கடினம் என்பதை ஸ்டீபன் பிளெமிங் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்