2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா..? முன்னாள் வீரர் கணிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் உள்ளது.;
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடருக்கு முன் சர்வதேச டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாடிய இந்திய அணி தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது என கருதலாம். இந்த தொடரின் முடிவில் இந்திய அணி (46.67 சதவீத புள்ளிகள்) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இதில் ஆஸ்திரேலியா 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து 66.67 சதவீத புள்ளிகளுடன் இலங்கை 2-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25) இறுதிப்போட்டிக்கு இந்திய அணி எளிதில் தகுதி பெறும் என்று அனைவரும் நினைத்த வேளையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த சூழலில் இம்முறை புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் என்று சொல்ல முடியாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அந்த 3 தொடர்களையும் நாம் வெல்வோம் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாம் வெல்வோம். நாம் அடுத்த தலைமுறையை நோக்கிய மாற்றத்தில் இருப்பதால் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்போம் என்று நேரடியாக சொல்ல முடியாது.
வெளிநாட்டு தொடர்களைப் பொறுத்த வரை இலங்கையில் நாம் நிறைய புள்ளிகளைப் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறேன். நியூசிலாந்தில் வெற்றி பெறுவது கடினம். அதை நாம் பரவாயில்லை என்று நினைப்போம். எப்படியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் டாப் 3 அல்லது 4 இடங்களுக்குள் இருப்போம். நாம் ஒரு மாற்றத்தை கடந்து செல்வதால், இந்தியா நிச்சயமாக தகுதி பெறும் என்று நீங்கள் நம்பிக்கையுடன் சொல்ல முடியாது. ஆனால் இந்திய அணி ஒரு வலுவான போட்டியாளராக நான் கருதுகிறேன்” என்று கூறினார்.