ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றுமா தென்ஆப்பிரிக்கா? இன்று கடைசி ஆட்டம்
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது.;
மெக்காய்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் கெய்ன்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்திலும், மெக்காயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 84 ரன் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது.
தசைப்பிடிப்பு காயம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் இருந்து விலகிய பவுமா உடல் தகுதியை எட்டாவிட்டால் மார்க்ரம் அணியை வழிநடத்துவார். தொடரை முழுமையாக கைப்பற்ற தென்ஆப்பிரிக்க அணி ஆர்வம் காட்டும்.
தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.