இந்திய அணியில் இடம்பிடிக்க மகளிர் பிரீமியர் லீக் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது - ஜெமிமா ரோட்ரிக்ஸ்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.;
Image Courtesy : ANI
மும்பை,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. செப்.30-ந்தேதி பெங்களூருவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதை குறிக்கும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. இதில் ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, தலைமை செயல் அதிகாரி சஞ்ஜோக் குப்தா, இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங், முன்னாள் வீராங்கனை மிதாலிராஜ், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேசுகையில் கூறியதாவது, இளம் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு மகளிர் பிரீமியர் லீக் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போது, இளம் வீராங்கனைகள் மிகப் பெரிய அளவில் அழுத்தத்தில் இருப்பதில்லை. நாங்கள் கிராந்தி கவுதின் செயல்பாட்டை பார்த்தோம். அவர் மிகவும் அச்சமின்றி செயல்படுகிறார்.
அதனை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. இளம் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவது அணியில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.