மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இந்தியா

இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.;

Update:2025-04-29 19:03 IST

Image Courtesy: @ICC / @BCCI

கொழும்பு,

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் கண்டது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வால்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்து பிரிந்தது. லாரா வால்வார்ட் 43 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய லாரா குடால் 9 ரன், கரபோ மெசோ 7 ரன், சுனே லூஸ் 28 ரன், க்ளோ ட்ரையன் 18 ரன், அன்னெரி டெர்க்சன் 30 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டாஸ்மின் பிரிட்ஸ் சதம் அடித்த நிலையில் 109 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய நாடின் டி கிளார்க் ரன் எடுக்காமலும், மசாபட்டா கிளாஸ் 2 ரன், நோன்குலுலேகோ மிலாபா 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 261 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 15 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இதுவரை தான் விளையாடிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இலங்கையை மே 4ம் தேதி எதிர்கொள்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்