மெஸ்ஸிக்கு கைக்கடிகாரம் பரிசளித்த ஆனந்த் அம்பானி...விலை இத்தனை கோடியா ?
மெஸ்ஸிக்கு கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.;
புதுடெல்லி,
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி, ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 14 ஆண்டுக்கு பிறகு மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ந்தேதி இந்தியாவுக்கு வந்தார். முதலில் கொல்கத்தாவுக்கு சென்ற அவர் தனது 70 அடி உருவச்சிலையை திறந்து வைத்தார். ஆனால் அங்கு சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெறும் 15 நிமிடங்களில் வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை சூறையாடினர்.
இதனால் குழப்பம் ஏற்பட்டாலும் அவரது பயணம் தடங்கலின்றி தொடர்ந்தது.பின்னர் ஐதராபாத், மும்பை சென்ற மெஸ்சி அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து மெஸ்ஸி மும்பையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றார். மெஸ்ஸியின் வருகையொட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரபலங்களுக்கான கண்காட்சி கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெஸ்ஸியை காண மைதானத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மெஸ்ஸி நுழைந்ததும் அவரது பெயரை உச்சரித்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இளம் கால்பந்து வீரர்களுடன் சிறிது நேரம் விளையாடிய மெஸ்ஸி, பின்னர் மைதானத்தில் கரைபுரண்ட உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில் வலம் வந்தார். மெஸ்ஸியுடன், இண்டர் மியாமி கிளப் வீரர்கள் ரோட்ரிகா டி பால், லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.
இதன்பின்னர் மெஸ்சியுடன், நட்சத்திர கால்பந்து வீரர்களான லூயிஸ் சுவாரெஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் குஜராத்தின் ஜாம்நகருக்கு இரவில் வந்தடைந்தனர். அவர், வந்தாரா வனவாழ் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு சென்றனர். அவரை அந்த மையத்தின் நிறுவனர் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநரான ஆனந்த் அம்பானி வரவேற்றார்.
இந்த நிலையில், இந்த நிகழ்வின் போது மெஸ்ஸிக்கு கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
ரிச்சர்ட் மில் RM 003 V2 ஆசிய எடிஷன் கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்த ஆனந்த் அம்பானி பரிசளித்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.10.91 கோடியாகும். உலகிலேயே இந்த எடிஷனில் 12 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.