மெஸ்சியுடன் புகைப்படம் எடுக்க கட்டணம் இவ்வளவா..? ரசிகர்கள் குமுறல்
ஐதராபாத்தில் மெஸ்சியை சந்தித்து புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;
image courtesy: AP/PTI
கொல்கத்தா,
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 3 நாள் சுற்றுப்பணமாக இந்தியாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் அவர் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். வருகிற 13-ந்தேதி அதிகாலை கொல்கத்தா வந்தடையும் மெஸ்சி, அங்கு நிறுவப்பட்டுள்ள அவரது 70 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். ஆனால் பாதுகாப்பு கருதி அவர் ஓட்டலில் இருந்தபடி காணொலி வாயிலாக சிலையை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் இந்தியா வரும் மெஸ்சியுடன் புகைப்படம் எடுப்பதற்கு கட்டணமாக ரூ.9.95 லட்சம் + ஜிஎஸ்டி (ஏறக்குறைய ரூ.10 லட்சம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தின் பலக்னுமா அரண்மனையில் 13-ம் தேதி அன்று மெஸ்ஸியை சந்தித்து புகைப்படம் எடுக்கும் வகையில், மாவட்ட செயலியில் (District App) 100 டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இருப்பினும் மெஸ்சியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 10 லட்சம் அதிகம் என்று ரசிகர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.