மும்பையில் மெஸ்ஸி....ரசிகர்கள் ஆரவாரம்

மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;

Update:2025-12-14 18:21 IST

மும்பை ,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். 14 ஆண்டுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்சிக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க வரவேற்றனர்.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் அவர் உலகக் கோப்பையை பிடித்து இருப்பது போல் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது அந்த சிலையின் அருகே திரண்டு இருந்த ரசிகர்கள் இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் தேசிய கொடியை கையில் உயர்த்தி பிடித்தபடி நின்றிருந்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட் லேக் ஸ்டேடியத்தில் அவரை ரசிகர்கள் காண்பதற்கான பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மெஸ்சியை, இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் வரவேற்றதுடன் அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர். முன்னதாக அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.

மைதானத்துக்குள் நுழைந்த மெஸ்சியை கண்டதும் முதூகலத்துடன் ஆர்ப்பரித்தனர். இதனால் ஸ்டேடியமே அதிர்ந்தது. அவர் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

கொல்கத்தா நிகழ்ச்சி முடிந்ததும் மெஸ்சி ஐதராபாத்துக்கு சென்றார். அங்கு இரவு நடந்த காட்சி கால்பந்து போட்டியில் கலந்து கொண்டார். அவர் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோருடன் இணைந்து விளையாடினார். அத்துடன் இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய அவர் தன்னுடன் வந்த சுவாரஸ், ரோட்ரிகோ ஆகியோருடன் சேர்ந்து மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவருக்கு மெஸ்சி அர்ஜென்டினா அணியின் சீருடையை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் இன்று மெஸ்ஸி மும்பை வந்தடைந்தார். மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மைதானத்தில் நிரம்பி இருந்த ரசிகர்கள் 'மெஸ்ஸி மெஸ்ஸி'  என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து காட்சி கால்பந்து போட்டியை மெஸ்ஸி தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரியை மெஸ்ஸி சந்தித்தார்.வான்கடே மைதானத்தில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு மெஸ்ஸி கால்பந்து பயிற்சி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்