ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.;
14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு வந்தன. மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டங்களில் ஆடுகின்றன.
சென்னையில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி சுற்றில் ஸ்பெயின் அணி, நியூசிலாந்தை சந்தித்தது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு நியூசிலாந்து 3 கோல்கள் திருப்பி சமநிலையை எட்டியது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் புருனோ அவிலா பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார். இதனால் ஸ்பெயின் அணி 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
மற்றொரு கால்இறுதியில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் பிரான்சுடன் மல்லுக்கட்டியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு இருந்ததால் முடிைவ அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் ஜெர்மனி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை தெறிக்கவிட்டு அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. ஜெர்மனி கோல்கீப்பர் ஜேஸ்பர் டிட்செர் ஷூட்-அவுட் மட்டுமின்றி போட்டி முழுவதும் ஜொலித்தார்.
இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா வீரர் மார்டினஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 52-வது நிமிடத்தில் அடித்த கோல் வெற்றியை தீர்மானிப்பதாக அமைந்தது.
இரவில் அரங்கேறிய கடைசி கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் கோதாவில் குதித்தன. 13-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கேஸ்பர்ட் கார்னெஸ் இந்திய பின்கள வீரர்களை ஏமாற்றி கோலடித்தார். நடப்பு தொடரில் இந்தியா விட்டுகொடுத்த முதல் கோல் இது தான். அடுத்த அரைமணி நேரம் அவர்களின் கோல்எல்லையை இந்திய வீரர்கள் பலமுறை நெருங்கிய போதிலும் கோலாக்க முடியவில்லை. இதனால் டென்ஷன் எகிறியது. ஒருவழியாக 45-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய கேப்டன் ரோகித் கோலாக்கினார். 48-வது நிமிடத்தில் ஷர்தானந்த் திவாரி இன்னொரு கோலடித்தார். இதைத் தொடர்ந்து பெல்ஜியத்துக்கு அடுத்தடுத்து கிட்டிய பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய கோல் பிரின்ஸ்தீப் சிங் தடுத்து நிறுத்தி அசத்தினார். இந்தியா வெற்றியை நெருங்கி சமயத்தில், ஒரு நிமிடம் எஞ்சியிருந்த போது பெல்ஜியத்தின் நாதன் ரோக்கி பந்தை வலைக்குள் திணித்து அதிர்ச்சி அளித்தார். வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனதால் பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது.
இதில் முதல் 4 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 3-ஐ கோலாக்கின. பெல்ஜியத்தின் கடைசி வாய்ப்பில் நிகோலஸ் போகர்ட்ஸ் அடித்த பந்தை இந்திய கீப்பர் பிரின்ஸ்தீப் சிங் முறியடித்தார். இதன் பின்னர் இந்தியாவுக்குரிய வாய்ப்பில் அங்கித் பால் கோலாக்கி அரங்கில் குழுமியிருந்த உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
திரில்லிங்கான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. கோல் கீப்பர் பிரின்ஸ்தீப்சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நாளை நடக்கும் அரைஇறுதியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜெர்மனியை சந்திக்கிறது. மற்றொரு அரைஇறுதியில் ஸ்பெயின்- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
இன்று மதுரையில் நடைபெறும் 21 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் நமிபியா-கனடா (காலை 9 மணி), ஓமன்-எகிப்து (காலை 11.30 மணி), 17 முதல் 20-வது இடத்துக்கான ஆட்டங்களில் ஆஸ்திரியா- சீனா (பிற்பகல் 2 மணி), தென்கொரியா- வங்காளதேசம் (மாலை 4.30 மணி) அணியும், சென்னையில் நடைபெறும் 13 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டங்களில் சிலி- ஜப்பான் (பகல் 12.30 மணி), மலேசியா- சுவிட்சர்லாந்து (பிற்பகல் 3 மணி), 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டங்களில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா (மாலை 5.30 மணி), தென்ஆப்பிரிக்கா- அயர்லாந்து (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.