ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி அரையிறுதியில் தோல்வி
1-5 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இந்திய அணி பறிகொடுத்தது.;
சென்னை,
14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய அரைஇறுதியில் 2-ம் நிலை அணியும், முன்னாள் சாம்பியனுமான இந்தியா, 7 முறை சாம்பியனான ஜெர்மனியுடன் மல்லுக்கட்டியது.
பலம் வாய்ந்த ஜெர்மனி 2-வது நிமிடத்தில் கோல் திணிக்க முயற்சித்தது. அவர்களின் ஷாட்டை இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் தடுத்தார். என்றாலும் ஜெர்மனியின் ஆக்ரோஷம், பந்தை சாதுர்யமாக கடத்தி செல்லும் திறன் முன் இந்தியாவின் யுக்தி எடுபடவில்லை. இந்திய தடுப்பு அரணை எளிதில் உடைத்த அவர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு மிரட்டினர்.
14-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை ஜெர்மனியின் லுகாஸ் கோசெல் கோலாக்கினார். அடுத்த நிமிடத்தில் ஜெர்மனியின் திதஸ் வெக்ஸ் மற்றொரு கோல் போட்டார். 0-2 என்று பின்தங்கிய இந்திய வீரர்களால் அந்த சரிவில் இருந்து நிமிர முடியவில்லை. தொடர்ந்து லுகாஸ் கோசெல் (30-வது நிமிடம்), ஜோனஸ் வான் கெர்சம் (40-வது நிமிடம்), பென் ஹேஸ்பேச் (49-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு இந்தியாவின் நம்பிக்கையை முற்றிலும் சீர்குலைத்தனர். பந்தும் அவர்கள் பக்கமே அதிகமாக (55 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது.
இதனால் நிலைகுலைந்து போன இந்திய அணி ஒரு வழியாக 51-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒரு கோல் திருப்பியது. அன்மோல் எக்கா கோலடித்து குழுமியிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
முடிவில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரைஇறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை சாய்த்து இறுதிசுற்றை எட்டியது. இதில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை நீடித்த நிலையில், 56-வது நிமிடத்தில் ஆல்பெர்ட் செராஹிமா கோல் போட்டு ஸ்பெயினுக்கு வெற்றியை தேடித்தந்தார்.
முன்னதாக 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டங்களில் பெல்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், நெதர்லாந்து 6-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும் தோற்கடித்தது.
இதே மைதானத்தில் வருகிற 10-ந்தேதி இரவு 8 மணிக்கு நடக்கும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக அதே நாளில் 3-வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.