ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா- ஜெர்மனி இன்று பலப்பரீட்சை
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கியில் இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.;
சென்னை,
14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று மற்றும் கால்இறுதி முடிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, அர்ஜென்டினா, கடந்த முறை 3-வது இடம் பெற்ற ஸ்பெயின் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் 2 முறை சாம்பியனான (2001, 2016) இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்தை பந்தாடியது. 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்த கால்இறுதியில் இந்தியா பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட்டில் கோல்கீப்பர் பிரின்ஸ் தீப்சிங் 2 ஷாட்களை அபாரமாக தடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
7 முறை சாம்பியனான ஜெர்மனி லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகளை துவம்சம் செய்தது. 2-2 என்ற கோல் கணக்கில் சமனான கால்இறுதியில் பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வெளியேற்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
ஜெர்மனி அணி 10-வது முறையாகவும், இந்திய அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தங்களது முழு பலத்துடன் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. அதேநேரத்தில் வலுவான ஜெர்மனியின் சவாலை சமாளிக்க இந்திய அணி தனது உயர்வான ஆட்ட திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
5 முதல் 8-வது இடங்களுக்கான ஆட்டங்களில் பெல்ஜியம்-பிரான்ஸ் (பகல் 12.30 மணி), நெதர்லாந்து-நியூசிலாந்து (பிற்பகல் 3 மணி) அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே, மதுரையில் நேற்று நடந்த 17 முதல் 24-வது இடங்களுக்கான ஆட்டங்களில் கனடா 3-1 என்ற கோல் கணக்கில் நமிபியாவையும், எகிப்து 8-2 என்ற கோல் கணக்கில் ஓமனையும், ஆஸ்திரியா பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் சீனாவையும், வங்காளதேசம் 5-3 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும் தோற்கடித்தன.
சென்னையில் நடந்த 9 முதல் 16-வது இடங்களுக்கான ஆட்டங்களில் ஜப்பான் 3-1 என்ற கோல் கணக்கில் சிலியையும், மலேசியா 7-3 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தையும், இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், அயர்லாந்து 4-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும் வென்றன.