ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி: மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் நடக்கிறது

4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.;

Update:2025-07-16 06:26 IST

கோப்புப்படம்

சென்னை,

இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

ஓபன் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இருபாலருக்கும் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுக்கு தகுதி சுற்றான இந்த போட்டிக்குரிய இந்திய அணியில் 12 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த கிஷோர் குமார், கமலி, ஸ்ரீகாந்த், ஸ்ரீஸ்டி செல்வம், தயின் அருண், ஹரிஷ், பிரகலாத் ஸ்ரீராம், தமயந்தி ஸ்ரீராம் ஆகிய 8 பேரும் அடங்குவார்கள்.

இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்த தமிழக அரசு ரூ.3.3 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, இந்திய அலைச்சறுக்கு சம்மேளன தலைவர் அருண் வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்