எதிர்பார்த்தது போல் முடிக்க முடியவில்லை - நீரஜ் சோப்ரா வேதனை
உலக தடகள சாம்பியன்ஷிப்பை இவ்வாறு நிறைவு செய்வேன் என்று நினைக்கவில்லை என நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
டோக்கியோவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில், நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் இறங்கிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 84.03 மீட்டர் எறிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த இரு உலக தடகளத்தில் பதக்கம் வென்று தந்த சோப்ரா இந்த முறை தடுமாறி விட்டார்.
தோல்விக்கு பிறகு நீரஜ் சோப்ரா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக தடகள சாம்பியன்ஷிப்பை இவ்வாறு நிறைவு செய்வேன் என்று நினைக்கவில்லை. அனைத்து சவால்களையும் சமாளித்து இந்தியாவுக்காக எனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால் அது எனக்குரிய நாளாக அமையவில்லை. சக நாட்டு வீரர் சச்சின் யாதவுக்காக (4-வது இடம்) மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்ததுடன், ஏறக்குறைய பதக்கத்தையும் நெருங்கினார்.
இந்த பந்தயத்தில் பதக்க மேடையில் ஏறிய டிரினிடாட் அண்ட் டொபாக்கோவின் வால்காட், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் ஆகியோருக்கு வாழ்த்துகள். உங்கள் (ரசிகர்கள்) அனைவரது ஆதரவுக்கும் நன்றி. இது என்னை வலுவாக மீண்டு வர உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.