மொனாக்கோ டைமண்ட் லீக் தடகளம்: இந்திய வீரர் சாப்லே ஏமாற்றம்
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற மொனாக்கோ டைமண்ட் லீக் தடகள போட்டி மொனாக்கோவில் நடந்தது.;
கோப்புப்படம்
மொனாக்கோ,
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற மொனாக்கோ டைமண்ட் லீக் தடகள போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் டாப்-5 இடத்துக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் அவினாஷ் சாப்லே ஓடும் போது தடுமாறி விழுந்தார். இதனால் அவர் போட்டி தூரத்தை முழுமையாக கடக்க முடியாமல் பாதியில் வெளியேறினார்.
அவரது காயத்தின் தன்மை குறித்து உடனடியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த இரு டைமண்ட் லீக் போட்டிகளில் 13-வது மற்றும் 8-வது இடத்தை பிடித்த அவர் இந்த முறை போட்டியை நிறைவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அளித்தார். இதில் மொராக்கோவை சேர்ந்த சோபியானே எல் பக்காலி 8 நிமிடம் 01.18 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.
ஜப்பான் வீரர் ரியூஜி மியுரா (8 நிமிடம் 03.43 வினாடி) 2-வது இடமும், கென்யாவின் எட்முன்ட் செரிம் (8 நிமிடம் 04.00 வினாடி) 3-வது இடமும் பெற்றனர். 23 வயதுக்குட்பட்டோருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அனிமேஷ் குஜூர் 20.55 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது இடத்தை பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் கோய்ட் (20.10 வினாடி) முதலிடமும், போட்ஸ்வானாவின் பூசாங் காலின் (20.28 வினாடி) 2-வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் நயீம் ஜாக் (20.42 வினாடி) 3-வது இடமும் பிடித்தனர்.