புரோ கபடி லீக் ‘பிளே ஆப்’: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update:2025-10-26 10:45 IST

Image Courtesy: @ProKabaddi

புதுடெல்லி,

12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற 12 அணிகளும் தலா 18 ஆட்டங்களில் ஆடின. லீக் சுற்று முடிவில் முதல் 8 இடங்களை பிடித்த புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் ‘பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

உ.பி. யோத்தாஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த போட்டி தொடரின் பிளே-ஆப் சுற்று டெல்லியில் நேற்று தொடங்கியது.

புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியை தழுவும் அணி, வெளியேற்றுதல் சுற்று மூலம் ஏற்றம் காணும் அணியை 2-வது தகுதி சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் அரியானாவை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், யு மும்பாவை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணியும் வெற்றி பெற்றன. தோல்வி கண்ட அரியானா, யு மும்பா அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் 2வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்