உலக தடகள போட்டி: இந்திய அணியில் 19 பேருக்கு இடம்
இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.;
புதுடெல்லி,
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 13-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. கவுரவமிக்க இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா தலைமையிலான இந்திய அணியில் மொத்தம் 19 பேர் இடம் பெற்றுள்ளனர். நீரஜ் சோப்ராவுடன், சச்சின் யாதவ், யஷ்வீர் சிங், ரோகித் யாதவ் என 4 வீரர்கள் ஈட்டி எறிதலில் திறமையை காட்ட உள்ளனர். உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் 4 இந்தியர்கள் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒரு நாட்டில் இருந்து 3 வீரர்கள் மட்டுமே ஒரு பந்தயத்தில் கலந்து கொள்ள முடியும். ஆனால் நீரஜ் சோப்ரா நடப்பு சாம்பியன் என்பதால் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் களம் இறங்குகிறார். இதனால் இந்த பிரிவில் கூடுதலாக ஒரு இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேலும் (டிரிபிள் ஜம்ப்) இடம் பிடித்துள்ளார். 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் வீரர் அவினாஷ் சாப்லே இந்த போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும் உடல்தகுதியுடன் இல்லாததால் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய அணி வருமாறு:-
ஆண்கள்:- நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், யஷ்வீர் சிங், ரோகித் யாதவ் (4 பேரும் ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), குல்வீர் சிங் (5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர் (இருவரும் டிரிபிள் ஜம்ப்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), அனிமேஷ் குஜூர் (200 மீட்டர் ஓட்டம்), தேஜாஸ் ஷிர்சி (110 மீட்டர் தடைஓட்டம்), சர்வின் செபாஸ்டியன் (20 கிலோ மீட்டர் நடைப்பந்தயம்), ராம் பாபூ, சந்தீப் குமார் (இருவரும் 35 கிலோ மீட்டர் நடைப்பந்தயம்).
பெண்கள்:- பருல் சவுத்ரி, அங்கிதா தயானி (இருவரும் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோஸ்வாமி (35 கிலோ மீட்டர் நடைப்பந்தயம்), பூஜா (800 மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம்).