உலகக் கோப்பை குத்துச்சண்டை : 7 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
இந்திய வீராங்கனைகள் பிரமாதமாக செயல்பட்டனர்.;
புதுடெல்லி,
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த பந்தயங்களில் இந்திய வீராங்கனைகள் பிரமாதமாக செயல்பட்டனர்.
பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி, ஆசிய சாம்பியனான பார்சோனா போஜிலோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே எதிராளிக்கு சரமாரியாக குத்துகளை விட்டு மிரட்டிய மீனாட்சி 5-0 என்ற கணக்கில் போஜிலோவை துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி 5-0 என்ற கணக்கில் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவரான சிரின் சராபியை (இத்தாலி) சாய்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
70 கிலோ எடைப்பிரிவில் முன்னாள் இளையோர் உலக சாம்பியனான இந்தியாவின் அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அஜிஜா ஜோகிரோவாவை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் இந்தியாவின் நுபுர் பரபரப்பான ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சோதிம்போவா ஒல்டினாயை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் குவா யி ஜியானை தெறிக்கவிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.60 கிலோ எடைப்பிரிவில் பர்வீன் ஹூடாவை தங்கப்பதக்கம் வென்றார்.
இதேபோல் நடப்பு உலக சாம்பியனான ஜாய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ) சீன தைபேயின் வு ஷி யியை பந்தாடி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.