உலக பாரா தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் சிம்ரன் தங்கம் வென்று சாதனை

12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.;

Update:2025-10-04 10:31 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத்குமார் (டி47 பிரிவு) 2.14 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். துருக்கியின் அப்துல்லா இகாஸ் வெள்ளிப்பதக்கமும் (2.08 மீ.), உலக சாதனையாளரான அமெரிக்காவின் ரோட்ரிக் டவுன்சென்ட் (2.03 மீ.) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் (டி12 பிரிவு) இந்திய வீராங்கனை சிம்ரன் 11.95 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று வரலாறு படைத்தார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான இந்த பிரிவில் வழிகாட்டியின் உதவியுடன் ஓடுவது இந்த ஓட்டத்தின் சிறப்பம்சமாகும். 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி பாலும் (டி35 பிரிவு), வட்டு எறிதலில் (எப்.64) இந்திய வீரர் பர்தீப்குமாரும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர்.

நேற்றைய பந்தயங்கள் முடிவில் பதக்கப்பட்டியலில் பிரேசில் 12 தங்கம் உள்பட 37 பதக்கத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கத்துடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்