சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி - அக்டோபர் 27-ந் தேதி தொடக்கம்

மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரதான சுற்றில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் கலந்து கொள்கின்றனர்.;

Update:2025-07-18 14:15 IST

கோப்புப்படம்

சென்னை,

2-வது சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற அக்டோபர் 27-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரங்கேறுகிறது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரதான சுற்றில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் கலந்து கொள்கின்றனர். தரவரிசையில் முன்னிலை வகிக்கும் வீராங்கனைகள் பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் ஒற்றையர் தகுதி சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தினசரி போட்டிகள் மாலை 4.30 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும்.

இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.39 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 250 தரவரிசை புள்ளியுடன் ரூ.31½ லட்சமும், இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் ஜோடிக்கு 250 தரவரிசை புள்ளியுடன் ரூ.11½ லட்சமும் பரிசாக வழங்கப்படும். இந்த போட்டி குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்