முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் பிரசாரம்
பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
மதுரை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. வேட்பாளர்கள், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் பிரசார பொதுக்கூட்டங்களின் மூலம் வாக்குகள் சேகரித்து வருகின்றார்.
இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்தும், சிவகங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டும் மதுரை பாண்டிகோவில் ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பிரமாண்டமான பிரசார கூட்டம் நடைபெறுகிறது.
பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணிக்கு மதுரை வருகிறார்.
பின்னர் கார் மூலம் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகை தருகிறார். அவருக்கு வரும் வழியில் கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். கூட்டம் முடிந்த பின்னர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் தேனி செல்கிறார். பொதுக்கூட்டத்தையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.