இந்தியாவை சூப்பர்பவராக மாற்ற விருப்பம்: ராஜ்நாத் சிங் பேச்சு


இந்தியாவை சூப்பர்பவராக மாற்ற விருப்பம்:  ராஜ்நாத் சிங் பேச்சு
x

2027-ம் ஆண்டில் உலக அளவில் இந்தியா 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என உலகளாவிய நிதி நிறுவனங்கள் கூறி வருகின்றன என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் நடந்த பேரணி ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, புதிய இந்தியாவை கட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்து விடும் என பிரதமர் மோடி உறுதி எடுத்துள்ளார்.

இந்தியாவை உலக அளவில் ஒரு சூப்பர்பவர் கொண்ட நாடாக உருவாக்க நாம் விரும்புகிறோம். சூப்பர்பவராக நாம் மாற விரும்புவது தாக்குதல் நடத்துவதற்காகவோ அல்லது ஆக்கிரமிப்பு செய்வதற்காகவோ அல்ல. ஒவ்வொருவருடனும் நல்ல உறவுகளை பேணுவதற்காக என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, 2004 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில், காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, பொருளாதாரத்தில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது என கூறினார்.

ஆனால், உலக அளவில் இந்தியா இன்று 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது மட்டுமின்றி, 2027-ம் ஆண்டில் உலக அளவில் இந்தியா 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என உலகளாவிய நிதி நிறுவனங்கள் கூறி வருகின்றன என்றும் பேசியுள்ளார்.

இந்தியா விரைவாக வளர்ந்து வருகிறது. வறுமையை குறைப்பதற்கான அரசை உருவாக்க விரும்புகிறோம் என பல கட்சிகள் கூறின. ஆனால், எந்த அரசாலும் அதனை செய்ய முடியவில்லை. மோடி அரசின் தலைமையின் கீழ், விரும்பிய முடிவை நாம் அடைந்திருக்கிறோம் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை கூறுகின்றன என்றும் அவர் பேசியுள்ளார்.

புதிய பாரதம் ஒன்றை உருவாக்க அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய வாக்கை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு, பிரதமராக மோடியே மீண்டும் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story