உள்நாட்டு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்


உள்நாட்டு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்
x

இந்தியர்களில் 82 சதவீதம் பேர் கோடை காலத்தில் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் வெளிநாட்டு பயணங்களை விட உள் நாட்டில் இருக்கும் சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கே விரும்புகிறார்கள்.

92 சதவீதம் பேரின் விருப்ப தேர்வாக உள்நாட்டு சுற்றுலா இடங்களே உள்ளன. கொரோனா காலகட்டத்தில் தொய்வடைந்திருந்த சுற்றுலா துறை இப்போது புத்துணர்வு பெற்றிருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பயண ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. தாங்கள் பார்வையிடாத இடங்களை நண்பர்கள், குடும்பத்தினருடன் கண்டுகளிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். விடுமுறை நாட்களை உல்லாச ஓய்வு காலமாக கழிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் 59 சதவீதம் பேர் பயணம் செய்ய விரும்புகிறார்கள். கோடை காலத்தில் 19 சதவீதம் பேர் திரிலிங்கான சாகச பயணங்களை தேர்வு செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு கோடை காலத்தை தங்களின் நண்பர்களுடன் கழித்தவர்கள், இந்த ஆண்டு குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டி இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 34 சதவீதம் பேர் குடும்பத்துடன் பயணம் செய்ய விரும்புகிறார்கள். நண்பர்களுடன் பயணம் செய்வதற்கு 25 சதவீதம் பேர் ஆசைப்படுகிறார்கள்.

9 சதவீதம் பேர் கோடை காலத்தில் தனிமை பயணங்களுக்கு திட்டமிடுகிறார்கள். பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் குறுகிய கால பயணங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். தங்கள் பயணங்களை ஒன்று முதல் 3 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். 51 சதவீதம் பேரின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது.

மலைகள் சூழ்ந்த பிரதேசங்கள், கடற்கரை இரண்டையுமே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 30 சதவீதம் பேர் மலைவாசஸ்தல பயணங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். 26 சதவீதம் பேர் கடற்கரை தேசங்களில் பொழுதை கழிக்க ஆசைப்படுகிறார்கள். மணாலி, காஷ்மீர், மெக்லியோட் கஞ்ச், ஊட்டி மற்றும் கூர்க் போன்றவை பெரும்பாலானவர்களின் விருப்பமான மலைவாசஸ்தலங்களாக உள்ளன.

கடற்கரைகளை பொறுத்தவரை கோவாதான் முன்னிலை வகிக்கிறது. 50 சதவீதம் பேர் கோவாவுக்கு செல்ல விரும்புகிறார்கள். கோவாவில் ஓட்டல் புக்கிங் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அந்தமான் நிக்கோபார், கேரளா, புதுச்சேரி, கோகர்ணா ஆகிய இடங்கள் விருப்ப பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 13 சதவீதம் பேர் ஆன்மிக சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


Next Story