போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் `வேளச்சேரி துப்பாக்கி சூடு'


போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் `வேளச்சேரி துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 12 July 2018 5:45 PM GMT (Updated: 12 July 2018 5:45 PM GMT)

சரத்குமார் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, `வேளச்சேரி துப்பாக்கி சூடு' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் அவர், `என்கவுண்ட்டர்' போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரி வேடத்தில் இனியா நடிக்கிறார். நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, அர்வி-நீரஜா ஆகிய இருவரும் இளம் ஜோடிகளாக அறிமுகம் ஆகிறார்கள். எஸ்.டி.வேந்தன் டைரக்டு செய்கிறார். இவர் கூறியதாவது:-

``இன்றைய தேதியில், வட மாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை-கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கலாசார சீர்குலைவும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். இளைஞர்களை கவரும் வகையில் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி சூடு சம்பவங்களை மனித உரிமை மீறல் என்று சொல்லும் இனியாவுக்கும், காவல் துறையின் நடவடிக்கைகள் சரியானதே என்று கூறும் சரத்குமாருக்கும் இடையே நடக்கும் விவாதங்களும், அதைச்சார்ந்த நிகழ்வுகளும்தான் படத்தின் அடிநாதம். சரத்குமார் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், `என்கவுண்ட்டர்' போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது இதுவே முதல் முறை.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தை டி.ராஜேஸ்வரி தயாரிக்கிறார்.''

Next Story