இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Feb 2022 10:19 AM GMT (Updated: 1 Feb 2022 10:19 AM GMT)

இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

இதன்படி ஒருநாள் தொடர் வரும் 6ஆம் தேதி அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதியன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும், டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன.  

முன்னதாக கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்காள அரசு முடிவெடுத்துள்ளது. விளையாட்டு அரங்குகளில் 75% ரசிகர்கள் அனுமதியுடன் போட்டிகள் நடக்கலாம் என மேற்கு வங்காள அரசு அனுமதி அளித்ததைத்தொடர்ந்து, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஆமதாபாத்தில் நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் குஜராத் கிரிக்கெட் சங்கம் தனது டுவிட்டரில், “2022 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தை நடத்தத் தயாராக உள்ளோம். பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி மிகவும் சிறப்பான மற்றும் வரலாற்றுப் போட்டியாக இருக்கும், ஏனெனில் இந்தியா தனது 1000வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த சாதனையை நிகழ்த்தும் உலகின் முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை இந்திய அணி பெறும்” என்று அதில் பதிவிட்டிருந்தது. 

Next Story