பெண்கள் உலக கோப்பை முதலாவது அரைஇறுதி: டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு


பெண்கள் உலக கோப்பை முதலாவது அரைஇறுதி: டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 29 March 2022 11:48 PM GMT (Updated: 29 March 2022 11:48 PM GMT)

மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமானதால் போட்டி தலா 45 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன், 

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது. 

மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று கம்பீரமாக அரைஇறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்கையில் முதுகு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதால் வெளியேறிய ஆல்-ரவுண்டர் எலிசி பெர்ரி முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று கேப்டன் மெக் லானிங் நேற்று தெரிவித்தார். அவர் இல்லாதது இழப்பு தான் என்றாலும், அந்த இடத்தை நிரப்பக்கூடிய வீராங்கனைகள் தங்கள் அணியில் இருப்பதாகவும் லானிங் கூறினார். 

ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவிடம் வீழந்ததன் மூலம் வெஸ்ட்இண்டீசுக்கு அரைஇறுதி வாய்ப்பு கனிந்தது. அந்த அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அபி பிளட்செர் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக மாற்று வீராங்கனையாக ஆல்-ரவுண்டர் மான்டி மாங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 

இந்நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டாபானி டெய்லர் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். மழை காரணமாக ஆட்டம் தொடங்க கால தாமதமானதால் போட்டி தலா 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.   

Next Story