கட்டாயம் ஹெல்மெட் அணியும் திட்டத்துக்கு எதிர்ப்பு: ஹெல்மெட்டை ரோட்டில் போட்டு உடைத்து போராட்டம்


கட்டாயம் ஹெல்மெட் அணியும் திட்டத்துக்கு எதிர்ப்பு: ஹெல்மெட்டை ரோட்டில் போட்டு உடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 11:15 PM GMT (Updated: 3 May 2017 9:20 PM GMT)

கட்டாயம் ஹெல்மெட் அணியும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெல்மெட்டை ரோட்டில் போட்டு உடைத்து போராட்டம் நடத்திய அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 1–ந்தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார். இதற்காக அவரது தலைமையில் நேற்று அண்ணா சிலை அருகே அ.தி.மு.க.வினர் கூடினார்கள். கட்டாய ஹெல்மெட் திட்டத்தை எதிர்த்து அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், மாநில துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வி, நாகமணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, மீனவர் அணி செயலாளர் ஞானவேல், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரோட்டில் போட்டு உடைப்பு

அப்போது அன்பழகன் எம்.எல்.ஏ.வும் மற்றவர்களும் ஹெல்மெட்டை ரோட்டில் போட்டு உடைத்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரம் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டம் குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–

ஹெல்மெட் அவசியம் என்பதை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய புதுச்சேரி அரசு கட்டாய சட்டத்தின் மூலம் மக்களிடம் ஹெல்மெட்டை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. அனைவருக்கும் தேவையான அளவுக்கு தரமான ஹெல்மெட் உள்ளதா? என்பதைக்கூட அரசு எண்ணிப்பார்க்கவில்லை. தரம் குறைந்த ஹெல்மெட்டுகள் நகரம் முழுவதும் தெருத்தெருவாக விற்கப்படுகின்றன.

தரமற்ற ஹெல்மெட்டுகளை போடுவதால் விபத்தின்போது அது உடைந்து மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். காவல்துறையின் அடக்குமுறை, அபராதம் ஆகியவற்றுக்கு பயந்து தரமற்ற ஹெல்மெட்டை மக்கள் வாங்கி அணிகிறார்கள் என்பதை அரசு உணராமல் 90 சதவீதம் மக்கள் ஹெல்மெட்டை அணிந்துவிட்டார்கள் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தேவை இல்லாதது

கட்டாய ஹெல்மெட் சட்டத்தால் பெண்கள் பாதிக்கப்படுவதை அரசு உணரவில்லை. சின்னஞ்சிறு நகரப் பகுதியான புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக ஒருநாள்கூட அமைச்சரோ, போக்குவரத்து ஆணையரோ ஆய்வு செய்தது கிடையாது. 20 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்ல முடியாத பகுதியில் ஹெல்மெட் தேவையா? ஹெல்மெட்டின் அவசியத்தை படிப்படியாக தெரிவித்து அதை அணிய மக்களை தயார் செய்வதை விட்டுவிட்டு இதுபோன்ற அடக்குமுறை சட்டம் தேவை இல்லாதது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story