உறுப்பினர் சேர்க்கையின் போது தி.மு.க.வினர் இடையே மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து


உறுப்பினர் சேர்க்கையின் போது தி.மு.க.வினர் இடையே மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 27 Oct 2017 11:30 PM GMT (Updated: 27 Oct 2017 6:37 PM GMT)

சேலத்தில் உறுப்பினர் சேர்க்கையின்போது தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேற்று காலை அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் தமிழரசன் வீட்டில் முன்னாள் எம்.பி. செல்வகணபதி ஆதரவாளர்கள் உறுப்பினர் சேர்க்கைக்கான கூட்டத்தை நடத்தினார்கள்.

அப்போது சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆதரவாளர்களான செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் பிரகாஷ் தலைமையில் 15–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் செல்வகணபதி ஆதரவாளர்களிடம், எங்களுடைய பகுதியில் நீங்கள் எப்படி உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம்? என்று கேட்டனர்.

இதையடுத்து இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ராஜேந்திரன் ஆதரவாளரான 27–வது வார்டு துணை செயலாளர் சுரேஷ்குமார் (வயது 39), செல்வகணபதி ஆதரவாளரான கிச்சிப்பாளையம் பகுதி மீனவர் அணி அமைப்பாளர் வரதன் (42) ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பிரகாஷ் (34), வினோத்குமார் (40) ஆகியோரும் காயம் அடைந்தனர். இதையடுத்து 4 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதல் குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியதால் மேலும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அம்மாபேட்டை பகுதியில் செல்வகணபதி ஆதரவாளர்கள் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடத்தினர். இதில் கலந்து கொள்வதற்காக செல்வகணபதி அங்கு வந்தார். அப்போது உறுப்பினர் சேர்க்கை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜேந்திரன் ஆதரவாளர்கள் கோ‌ஷம் போட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story