ரெயில், பஸ்சில் கடத்தி கொண்டு வந்த ஹவாலா பணம் பறிமுதல் 2 பேர் கைது


ரெயில், பஸ்சில் கடத்தி கொண்டு வந்த ஹவாலா பணம் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2017 10:30 PM GMT (Updated: 28 Oct 2017 7:03 PM GMT)

ரெயில், பஸ்சில் கடத்தி கொண்டு வந்த ரூ.32¾ லட்சம் ஹவாலா பணத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

கூடலூர்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்வேஷ்குமார் பக்ராவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி பெருந்தல்மன்னா துணை சூப்பிரண்டு மோகனசந்திரன் தலைமையிலான போலீசார் அங்காடிபுரம் ரெயில் நிலைய பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ரெயிலில் இருந்து இறங்கி சந்தேகப்படும்படி வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் சரியாக பதில் கூற வில்லை. இதை தொடர்ந்து அந்த நபரை பெருந்தல்மன்னா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் கோழிக்கோடு மாவட்டம் மாவூர் பகுதியை சேர்ந்த உன்னிமொய்து (வயது 63) என்பதும், ஹவாலா பணம் ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. பின்னர் பெருந்தல்மன்னா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மலப்புரம் மாவட்டம் வலாஞ்சேரி பஸ் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு உல்லாஷ், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது பஸ்சில் இருந்து பையை வைத்து கொண்டு சந்தேகப்படும்படி நடந்து வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் முன்னுக்குபின் பதில் அளித்தார். பின்னர் அவர்பையை சோதனை செய்த போது 200 மலேசிய நாட்டு பணமும், ரூ.14 லட்சத்து 30 ஆயிரத்து 200–ம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. பின்னர் அது ஹவாலா பணம் என தெரிய வந்தது.

இதையொட்டி அந்த பணத்தை பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இந்திய மதிப்பில் மலேசிய நாட்டு பணம் ரூ.1½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஹவாலா பணத்தை கடத்தி வந்ததாக செம்மாட் பகுதியை சேர்ந்த முகமது பஷீர் (48) என்பவர் மீது வலாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். ரெயில், பஸ்சில் கடத்தி வந்த ஹவாலா பணம் மொத்தம் ரூ.32 லட்சத்து 80 ஆயிரத்து 200–யை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story