முதலியார்பேட்டை ரவுடி கொலையில் மேலும் 4 பேர் கைது


முதலியார்பேட்டை ரவுடி கொலையில் மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2017 10:30 PM GMT (Updated: 28 Oct 2017 8:39 PM GMT)

புதுவை முதலியார்பேட்டையில் ரவுடியை கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை உடையார்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னசெல்வம்(வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை கடந்த 23–ந் தேதி இரவு ஒரு கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தேங்காய்திட்டு ஆற்றுப்பகுதியில் மண்புழுக்களை சேகரித்து இறால் பண்ணைகளுக்கு அனுப்புவது தொடர்பாக சின்னசெல்வத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் சக்திவேலை கொலை செய்துவிடுவதாக சின்ன செல்வம் மிரட்டியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சக்திவேல் (38), அவருடைய தம்பி ரமேஷ்(32) உள்பட 11 பேர் சேர்ந்து சின்ன செல்வத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரமேஷ்(32), அர்ஜுனன்(34), மணிவண்ணன்(28), நட்ராஜ்(30) ஆகிய 4 பேரை போலீசார் கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலர் புதுவை புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூருக்கு பஸ் ஏற காத்திருப்பதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பஸ்சுக்காக காத்து நின்ற ஜனா என்ற விமல்ராஜ்(18), அசோக் என்ற ராமலிங்கம்(24) ரகுராமன்(23), மூர்த்தி(33) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள், 5 அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் 8 பேரையும் நேற்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேல், ஜீவா, திலிப் ஆகிய மேலும் 3 பேரையும் போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்த முதலியார்பேட்டை போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரஹீம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story